இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன்.
கடுமையான இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதலும் தைரியமும் அளித்தேன்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று நடத்தி வரும் அமைச்சர்கள், இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.