தேனி
அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
|பெரியகுளம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி சீலிகருப்பன் தெருவை சேர்ந்தவர் சின்னவர். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர், தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், நான் எம்.பி.ஏ. படித்துள்ளேன். படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்தேன். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மனைவி ரக்சனா என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். நான் வேலை தேடி அலைவதை அறிந்த அவர் தேனி தலைமை கருவூலத்தில் காலிப்பணியிடம் ஒன்று உள்ளது. அந்த வேலையை எனக்கு வாங்கி தருவதாகவும், இதற்கு பணம் தேவைப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதை நம்பிய நான் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தேன். பின்னர் சிறிது நாட்கள் கழித்து பணிக்கான ஆணை ஒன்றை என்னிடம் கொடுத்தார். அந்த ஆணையை சோதனை செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த நான் கொடுத்த பணத்தை அவரிடம் பலமுறை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே பணத்தை வாங்க மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.