நீலகிரி
வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
|கூடலூர் பகுதியில் உரிய விலை கிடைக்காததால் வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் உரிய விலை கிடைக்காததால் வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விளைபொருட்கள்
கூடலூர் பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. மேலும் நேந்திரன் வாழை, பலா, பட்டர் புரூட், பேஷன் புரூட், அவரைக்காய், புடலங்காய், பாகற்காய், தட்டைப்பயிறு போன்றவையும் விளைவிக்கப்படுகிறது. இது தவிர ஆண்டுக்கு ஒருமுறை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது.
இங்கு விளையும் வேளாண் விளைபொருட்களுக்கு கேரள மாநிலத்தில் நிர்ணயிக்கக்கூடிய விலை மட்டுமே கிடைத்து வருகிறது. அது குறைந்த விலையாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
உரிய விலை இல்லை
தற்போது கூடலூர் பகுதியில் நேந்திரன் வாழைத்தார்கள் விளைந்துள்ளது. நல்ல விளைச்சல் உள்ள நிலையில், கேரள மாநிலம் வயநாடு மார்க்கெட்டில் உள்ள விலையை இங்கும் மொத்த வியாபாரிகள் நிர்ணயிக்கின்றனர். ஆனால் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் மார்க்கெட்டில் அதைவிட கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கேரளாவில் நேந்திரன் வாழைத்தார்கள் விளைச்சல் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வயநாடு மார்க்கெட்டுக்கு தரம் குறைந்த நேந்திரன் வாழைத்தார்கள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இதை பின்பற்றியே கூடலூர் பகுதி நேந்திரன் வாழைத்தார்களுக்கும் விலை நிர்ணயிப்பதால், உரிய விலை கிடைக்காது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
கர்நாடக மார்க்கெட்டில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு பெரும்பாலும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாழைத்தார்களே விற்கப்படுகிறது. இதனால் அவர்கள் பயன் பெறுகிறார்கள்.
ஆனால் கூடலூர் விவசாயிகள் குறைந்த விலைக்கு வாழைத்தார்களை விற்கும் நிலை உள்ளது. அவர்கள் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.
எனவே கூடலூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைத்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.