சென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
|சென்னையில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சாலைப் போக்குவரத்துச் சேவையை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, அமைப்புசாரா பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் அளிப்பது, இலாப நோக்கமின்றி அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்குவது மற்றும் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவது ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டுதான் பேருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது என்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்ற சென்னையில், தனியார் பேருந்துகளையும் அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகவும், இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் இலாபத்தில் இயங்குவதற்காக தி.மு.க. குழு 2018-ல் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்து பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்படும் என்றும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு, இவற்றிற்கு முற்றிலும் முரணாக தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற தி.மு.க. அரசின் முடிவு பொதுமக்களையும், போக்குவரத்துத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் செயல். ஒருவேளை ஏமாற்றுவதற்கு பெயர்தான் 'திராவிட மாடல்' போலும்!
சென்னை மாநகரில் தனியார் பேருந்துகளை அனுமதிக்கும்பட்சத்தில், சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வரும் வருவாய் கணிசமாக குறைந்து, கூடுதல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மேலும், பல அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல், எவ்வித பராமரிப்புமின்றி பணிமனைகளில் நிற்கும் சூழ்நிலையும் உருவாகும்.
தி.மு.க. அரசின் தனியார்மயமாக்கும் முடிவு என்பது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாட்டினை படிப்படிப்படியாக குறைத்து, ஒரு சில ஆண்டுகளில் முழுவதும் தனியார்மயம் என்ற நிலைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இது தவிர, தனியார் பேருந்துகளை அனுமதிக்கும்பட்சத்தில், அந்த நிறுவனங்கள் இலாப நோக்கத்தில்தான் செயல்படுமே தவிர, சேவை மனப்பான்மையுடன் செயல்படாது.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசம், மாணவ, மாணவியருக்கான இலவசம், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசம் ஆகியவை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், பொதுமக்களும்தான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அதனை இலாபத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர, அந்த நிறுவனத்தையே மூடும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.
சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்ற தி.மு.க. அரசின் முடிவு மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்த நிலையில், அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயங்குவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால், தனியார்மயமாக்க அரசு முடிவெடுத்துவிட்டது என்றுதான் பொருள். தனியார்மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றால், அதைப்பற்றி ஆய்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோருவது என்பது வீண் செலவுதானே. ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தினை மேலும் நஷ்டம் அடைய வழிவகுக்கும் வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.
பேருந்து சேவையை தனியாரிடத்திலே ஒப்படைப்பது என்பது இந்த நாட்டையே தனியாரிடத்தில் ஒப்படைப்பதற்கு சமம். எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சவால்களை திறம்பட எதிர்கொண்டு, அவற்றை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுப்பதுதான் திறமையான அரசுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். இதைவிடுத்து, தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையைத் தான் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற முடிவை உடனடியாக கைவிடவும், ஆய்வு செய்ய கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியினை ரத்து செய்யவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.