< Back
மாநில செய்திகள்
ரூ.21¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ரூ.21¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
4 July 2023 12:02 AM IST

விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21 லட்சத்து 73 ஆயிரம் நஷ்டஈடு வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை செய்யாறில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

செய்யாறு,

விபத்தில் பலி

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு அரசு பஸ்சில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்த பஸ் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலை பழவேரி அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டதில் செல்வராஜ் இறந்தார்.

விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விபத்தில் இறந்த தொழிலாளி செல்வராஜின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி அவரது மனைவி லதா, மகன்கள் அஜீத், விஷ்ணு, தந்தை துரைசாமி, தாயார் தேவி ஆகியோர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நஷ்டஈடு

அதில் மனுதாரர்களுக்கு அசல், வட்டி மற்றும் செலவுத்தொகை என மொத்தம் ரூ.18 லட்சத்து 54 ஆயிரத்து 101-ஐ வழங்கிட 2019-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி தீர்ப்பு அளிக்கபட்டது.

அதனை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக காஞ்சீபுரம் மண்டலம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில் ரூ.50 ஆயிரம் குறைத்து உத்தரவு வழங்கப்பட்டது.

அந்த உத்தரவின் பேரில் மனுதாரர்கள் தரப்பில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமாரவர்மன் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.21 லட்சத்து 73ஆயிரத்து 311-ஐ வழங்க கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டார்.

ஜப்தி செய்ய உத்தரவு

ஆனால் போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அந்த உத்தரவுடன் கோர்ட்டு ஊழியர்கள் செய்யாறு பஸ் நிலையத்துக்கு சென்றனர். காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு வழியாக சேலம் செல்வதற்காக பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்