விழுப்புரம்
மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தரப்பு பதில் மனுதாக்கல்
|முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தரப்பு பதில் மனுதாக்கல் நாளை மறுநாள் விசாரணை
விழுப்புரம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணை நடந்து வருவதால் இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே கடந்த 4-ந் தேதியன்று நடந்த விசாரணையின்போது இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளான போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீசார்கள் பாலமுருகன், சந்திரசேகர் ஆகிய 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து நேற்று அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் பதில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, இம்மனு மீதான விசாரணையை 10-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.