கரூர்
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
|மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
புகழூர் மேத்யூநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி லலிதா (வயது 60). இந்தநிலையில், கிருஷ்ணசாமி தனது மனைவி லலிதாவை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு கரூருக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் கரூரில் இருந்து 2 பேரும் ஸ்கூட்டரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். புகழூர் அருகே மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதே சாலையில் இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணவேணி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ஸ்கூட்டர் நிலை தடுமாறி கிருஷ்ணசாமியும், லலிதாவும் கீழே விழுந்தனர். அப்போது லலிதா சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டதால், மர்மநபர்கள் கையில் 1½ பவுன் சங்கிலி மாட்டிக் கொண்டது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து லலிதா கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.