மயிலாடுதுறை
பெண் தீக்குளிக்க முயற்சி
|மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க போலீசார் தடுத்து நிறுத்தினர் முயற்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர் ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவில் அவர், கணவரை விட்டு பிரிந்து வாழும் தான் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததாகவும், அப்போது செங்கல் சூளை உரிமையாளாரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், தான் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கொடுத்த பிறகும் செங்கல் சூளை உரிமையாளர் தன்னிடம் வீட்டின் சாவியை ஒப்படைக்காமல் தன்னை மிரட்டியதாகவும், இதுகுறித்து ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.