திருச்சி
பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி சாவு
|பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாள்.
1-ம் வகுப்பு மாணவி
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப்பட்டியைச் சேர்ந்தவர் வேதாச்சலம்(வயது 35). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(32). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்துஜா(8), சஹானா(6) என 2 மகள்கள் உண்டு.இதில் இந்துஜா குண்டுமணிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சஹானா 1-ம் வகுப்பும் படித்து வந்தாள்.
அஸ்திவாரம் அமைக்க...
குண்டுமணிப்பட்டியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் தேங்கி நின்றது.இந்நிலையில் நேற்று மாலை சஹானா விளையாட செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றாள். மழைநீர் தேங்கிய பள்ளத்தின் அருகே அவள் விளையாடியபோது, திடீரென அவள் பள்ளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கியதாக தெரிகிறது.
சாவு
இதற்கிடையே சஹானா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவளது பெற்றோர் சஹானாவை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சஹானா பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கியதை அறிந்த அக்கம் பக்கத்தினர், சஹானாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சஹானாவை பரிசோதித்த டாக்டர், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.