சென்னை
சென்னையில் இருந்து செல்ல இருந்த ஜெர்மனி விமானம் ரத்து
|எந்திரகோளாறல் ஜெர்மனியில் இருந்து வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இருந்து செல்ல இருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் தினமும் நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும், அதிகாலை 2 மணிக்கு பிராங்க்பர்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும்.
நேற்று முன்தினம் மாலை பிராங்பர்ட் நகரிலிருந்து 286 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதால் அவசரமாக மீண்டும் பிராங்க்பர்ட் நகரிலேயே தரை இறங்கியது.
விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் சென்னைக்கு நள்ளிரவு வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் 278 பயணிகள் பிராங்க்பர்ட் நகருக்கு செல்ல இருந்தனர்.
விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து அதில் செல்ல இருந்த பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல் கிடைக்காமல் சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் நிலைமையை விளக்கி இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை விமானம் புறப்பட்டு செல்லும் என்று கூறி அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு 187 பயணிகளுடன் நேற்று காலை 8 மணிக்கு விமானம் புறப்பட வேண்டும். பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
குவைத்தில் இருந்து வந்த விமானத்தை இயக்கி வந்த விமானி ஓய்வுக்கு சென்று விட்டார். ஆனால் விமானத்தை இயக்க வேண்டிய தலைமை விமானி சென்னை விமான நிலையத்துக்கு வரவில்லை. இதனால் குவைத் விமானத்தில் பயணிகள் ஏற்றப்படாமல் அமர வைக்கப்பட்டனர்.
விமானி காலதாமதமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். இதனால் 2½ மணிநேரம் தாமதமாக அந்த விமானம் குவைத்துக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.