பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை; ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
|கட்சியின் பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி கே.குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-
அதிகாரம் இல்லை
2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வந்து, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர். ஆனால், கட்சியின் விதிகளின்படி. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதில், கட்சியின் விதிகளை பின்பற்றவில்லை என்று தனி நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை.
பெரிய இழப்பு
பொதுக்குழுக் கூட்டம் நடக்கும்போது, அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் திடீரென ஏற்பட்டது. அந்த சம்பவம் நடந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் அங்கு இருந்துள்ளனர்.
பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தகுதியான ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி, தேர்தலை நடத்தியுள்ளனர். அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பெற்றதாக அறிவித்துள்ளனர். இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார்.
எம்.ஜி.ஆரின் நோக்கம்
அவர் தன் வாதத்தில், "அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தீர்மானங்கள் செல்லும் என்று தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறுவதன் மூலம், கட்சியின் அடிப்படை தொண்டர்களின் தீர்ப்பை மீறியுள்ளனர்" என்று வாதிட்டார்.
இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.