கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பல் வனத்துறையினர் தீவிர விசாரணை
|ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
மிளாவை வேட்டையாடிய கும்பல்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை பகுதியில் ஒரு தனியார் காற்றாலை பண்ணை உள்ளது. இங்கு இரவு நேரத்தில் காவலாளிகள் தங்குவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு காற்றாலை பண்ணை அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உடனே காவலாளிகள் அதிர்ச்சி அடைந்து அங்கு விரைந்தனர்.
அப்போது ஒரு கும்பல் துப்பாக்கியுடன் தப்பி ஓடியது. மேலும் துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து காற்றாலை பண்ணை பொறுப்பாளர் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வனத்துறையினர் விசாரணை
குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்த மிளாவை கைப்பற்றினர். தொடர்ந்து வனத்துறையினர் மோப்பநாய் மூலம் துப்பு துலக்கினர். பிறகு மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் ஆரல்வாய்மொழி கால்நடை டாக்டர் கிறிஸ்டோபால் ராய் மூலம் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்திலேயே புதைக்கப்பட்டது. நாட்டு துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடியது அம்பலமானது.
இதுதொடர்பாக வனத்துறையினர் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். மேலும் வேட்டையாடிய கும்பல் பற்றி துப்பு கொடுக்கும் நபர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். அவர்களின் ரகசியமும் காக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.