சென்னை
இளம்பெண்ணை உதவி கேட்க வைப்பதுபோல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறி செய்த கும்பல்
|இளம்பெண்ணை உதவி கேட்க வைப்பதுபோல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் அந்த வழியாக சென்ற ஒரு காரில் 'லிப்ட்' கேட்டார். இரவு நேரத்தில் இளம்பெண் தனியாக நின்றதால் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் காரை நிறுத்திய டிரைவர், பெண்ணை தனது காருக்குள் ஏற்றினார்.
அப்போது இருட்டில் மறைந்து இருந்த 4 பேர் கும்பல் திடீரென ஓடிவந்து காருக்குள் ஏறி, டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தனர்.
இதை பார்த்த சக வாகன ஓட்டி ஒருவர், சுங்கச்சாவடி அருகே நின்றிருந்த ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக அங்கு ரோந்து போலீசார் விரைந்தனர். போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் கொள்ளையர்கள் 4 பேரும் இருட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். காரில் இருந்த இளம்பெண்ணை மட்டும் டிரைவர் பிடித்து வைத்துக்கொண்டார்.
பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த அவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும், நேற்று முன்தினம் இரவு சுங்கச்சாவடி அருகே நின்ற பெண்ணை கொள்ளையர்கள் 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை சாலையில் நிறுத்தி அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்பதுபோல் மறித்து நிறுத்தும்படி மிரட்டினர்.
அதன்படி அந்த பெண்ணும் அந்த வழியாக சென்ற கார் டிரைவரிடம் உதவி கேட்டபோது, அந்த கும்பல் கார் டிரைவரிடம் வழிப்பறி செய்ததும் தெரிந்தது. இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.
பிடிபட்ட இளம்பெண்ணை வாகன ஓட்டி ஒருவர், வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.