சேலம்
டிரைவரின் கவனத்தை திசை திருப்பி காரை கடத்திய கும்பல்
|அன்னதானப்பட்டி:-
சேலத்தில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி 3 பேர் கும்பல் காரை கடத்தி சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காற்றாலை இறக்கைகள்
திருச்சியில் இருந்து பெங்களூரூவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடக மாநிலம் அசன் மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் (வயது 27) என்பவர் காரில் கண்காணித்தபடி பின்னால் சென்றார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து 2 லாரிகளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.
கார் கடத்தல்
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கிறது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை கடத்திக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் காருக்கு பின்னாலேேய தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
நள்ளிரவு நேரமாக இருந்தாலும் வாகன போக்குவரத்து மிகுந்த இடத்தில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி கார் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.