< Back
மாநில செய்திகள்
போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிய கும்பல்
கடலூர்
மாநில செய்திகள்

போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிய கும்பல்

தினத்தந்தி
|
26 Jan 2023 1:07 AM IST

நெய்வேலி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த பெண்ணை கொல்ல முயன்றதை தடுத்த போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம். இவருக்கு அஞ்சலை என்ற மகளும், அருள்முருகன் என்ற மகனும் உள்ளனர். கமலத்தின் வீட்டில், ராஜேஸ்வரி என்பவர் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கமலம் வீட்டின் மொட்டை மாடியில் உலர வைக்கப்பட்டிருந்த மணிலாவை, ராஜேஸ்வரியின் 2-வது மகளான மீனா (வயது 5) சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதைபார்த்து ஆத்திரமடைந்த கமலம், அஞ்சலை, அருள்முருகன் ஆகியோர் மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மீனா பரிதாபமாக இறந்தாள். இந்த கொலையை மறைக்க மீனாவின் உடலை முதனை கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் அவர்கள் புதைத்துள்ளனர். இதுதொடர்பாக கமலம் உள்ளிட்ட 3 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கமலம் உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

சமரசம்

இந்நிலையில் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம், அஞ்சலை ஆகியோர் ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் சமரசம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தங்களுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளிக்காமல் இருந்தால் குறிப்பிட்ட அளவு பணம் தருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு ராஜேஸ்வரியின் உறவினர்களும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கூறியபடி ராஜேஸ்வரியின் உறவினர்களிடம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்களான பிரதாப், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கமலத்தை கொலை செய்ய முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை அந்த கும்பல், கமலத்தின் வீட்டிற்கு சென்றது.

இதற்கிடையே ராஜேஸ்வரியின் உறவினர்கள் தன்னை கொலை செய்ய முடிவு செய்திருப்பது பற்றி அறிந்த அஞ்சலை, தெர்மல் போலீசில் புகார் அளித்ததோடு, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பதுங்கி இருந்த போலீசார்

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், கமலம் வீட்டின் அருகில் பதுங்கி இருந்தபடி கண்காணித்தனர். அந்த சமயத்தில் பிரதாப் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கமலம் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியது. அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

உடனே பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரிடம் காட்டி, எங்களை பிடிக்க முயற்சி செய்தால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பகுதியில் பிரதீப் உள்ளிட்ட 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அவர்கள் மீண்டும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கமலம் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார், தப்பிச் சென்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்