< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரின் முன்பகுதி கழன்று ஆற்றில் விழுந்தது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரின் முன்பகுதி கழன்று ஆற்றில் விழுந்தது

தினத்தந்தி
|
31 Dec 2022 12:10 PM IST

பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று பாலத்தின் மீது கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரின் முன்பக்க பகுதி கழன்று ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மண்டலம் பெரிய முடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 27). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்ட கரும்பை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு பள்ளிப்பட்டு அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு நேற்று காலை கரும்பை கொண்டு வந்தார். பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று பாலத்தில் டிராக்டர் வந்துக்கொண்டிருந்தது. அந்த நேரம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பாபு (53) லாரியில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றி வந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது லாரி டிராக்டரில் இருந்த கரும்புக்கட்டுகளின் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய டிராக்டர் பாலத்தில் இருந்து முன்பக்க என்ஜின் முழுவதும் கழன்று ஆற்றில் விழுந்தது. டிராக்டர் பின்பகுதியான டிராலி சாலையில் கரும்பு கட்டுடன் நின்றது. விபத்தில் டிராக்டர் ஓட்டி வந்த குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து குமார் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்