திருவாரூர்
தியாகராஜர் கோவில் கோபுரத்தை மறைத்த பனி மூட்டம்
|திருவாரூரில் திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால், தியாகராஜர் கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
திருவாரூரில் திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால், தியாகராஜர் கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
பனி மூட்டம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பின்னர் மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல,மெல்ல குறையும். ஆனால் மாசி மாதம் தொடங்கியும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருவாரூரில் அடிக்கடி இரவு நேரத்தில் இருந்து அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்ககூடிய வெயில் கடுமையாக இருக்கிறது.
வழக்கத்துக்கு மாறாக....
திருவாரூரில் நேற்று அதிகாலை வழக்கத்தை விட பனியின் தாக்கம் இருந்தது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் கோபுரம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதேபோன்று கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் நடுவில் உள்ள யோகாம்பாள் சமேத நாகநாத சுவாமி ஆலயம் பனிசூழ்ந்து காணப்பட்டது.
குறிப்பாக புலிவலம், சேந்தமங்கலம், ஆண்டிப்பந்தல், நன்னிலம், குளிக்கரை, அம்மையப்பன், மாங்குடி, அடியக்கமங்கலம், தேவர்கண்ட நல்லூர், காட்டூர், பவித்திரமாணிக்கம், வண்டாம்பாலை, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் அதிகளவு பனி மூட்டம் காணப்பட்டது.
உடல் நலக்குறைவு
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காணமுடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள குல்லா, மப்ளர் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றனர். பனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் நேற்று சிரமப்பட்டனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.