< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது

தினத்தந்தி
|
25 Oct 2022 1:45 PM IST

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தொடர்ந்து அதே அளவு நீர் அணைக்கு வந்தது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு இந்த நீர்வரத்து மேலும் சரிந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடியும் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி வீதம் என மொத்தம் 50 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளன.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 14-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, தேவூர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர குடியிருப்புகளில் வெள்ளம் வடிந்து வருகின்றன.

மேலும் செய்திகள்