< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக சரிவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக சரிவு

தினத்தந்தி
|
21 July 2022 9:53 AM IST

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 76 ஆயிரத்து 645 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 74 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

மேட்டூர்,

கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் தற்போது 80 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 12 -வது நாளாக தடை நீடிக்கிறது.

பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 76 ஆயிரத்து 645 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 74 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120.71 அடியாக இருந்தது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். மேலும் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரையும் அந்த பகுதியினர் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்