< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

தினத்தந்தி
|
27 Aug 2023 10:32 AM IST

அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலையில் வினாடிக்கு 6 ஆயிரத்து 266 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 3 ஆயிரத்து 423 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலையில் 54.42 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 53.70 அடியாக சரிந்தது. இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ் வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது. சில இடங்களில் வறண்டும், நிலப்பகுதி பாளம், பாளமாக வெடித்தும் காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையில் 20.22 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 14.70 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்