< Back
மாநில செய்திகள்
வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
7 Dec 2023 11:27 PM IST

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயலில் தமிழக அரசு தடுமாறி போயிருக்கிறது என்றும், வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது. குடியிருப்புகள் எல்லாம், தண்ணீர்க் குளங்களாக மாறிப் போனது. உயிருக்கும், உடைமைக்கும், உணவிற்கும் உத்தரவாதம் இல்லாமல் தமிழக மக்கள் தவித்துப் போனார்கள். மாநில அரசு செய்வதறியாது திகைத்து நிற்கும் போது, நிவாரணப் பணிகளைப் திட்டமிட, மத்திய அரசு 24 மணி நேரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை பார்வையிட அனுப்பி வைத்த வேகம் இதுவரை தமிழகம் காணாதது.

தமிழக அரசுக்கு பெருமழை பெய்யப்போகிறது என்ற தகவல் வந்திருந்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், ஏதும் புரியாது, செய்வது அறியாது, செயலிழந்து போனது. 2015 பெருவெள்ளம், 2016 வர்தா புயல் ஆகியவற்றின் தாக்கங்களை அனுபவித்த பிறகும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் மிக்ஜம் புயலிலும், தடுமாறிப் போனது தமிழக அரசு.

நிலையான செயல் திட்டங்கள் ஏதுமில்லாத தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள், இயல்பு வாழ்க்கை, வியாபாரம், தொழில், பள்ளி, கல்லூரி, அலுவலக செயல்முறையை முடக்கி போடும் வண்ணம் அமைந்திருந்தது. தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டது. செல்போன்கள் துண்டிக்கப்பட்டது, வைபை இணைப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசு எத்தனை விழிப்புடன் வருமுன் காத்திருக்க வேண்டும்? இப்படி மழை நீர் வடிகாலுக்கான திட்டங்களைக் கூட சரியாகச் செய்யத்தவிக்கும் அரசை நம்பி எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரும்?

பாலுக்கும், குடிநீர் கேனுக்கும் மக்கள் அலைய வேண்டியுள்ளது. உணவு பண்டங்களுக்காக உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுக்கும் போட்டோ சூட் நடந்து விட்டு கலைந்து சென்றார்களே தவிர மக்களின் துன்பங்களை கேட்கும் பொறுமைகூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

நிவாரணப் பணிகளையும், மழைநீர் வடிகால் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில், பிரதமரின் ஆணைக்கிணங்க மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசு விரைந்து செயல் பட்டு, இயற்கை பேரிடருக்காக முன்னர் வழங்கிய ரூ.450 கோடியும், தற்போது அவசர உதவியாக 2-ம் தவணை ரூ.450 கோடியும் ஆக மொத்தம் ரூ.900 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர முதன்முறையாக சென்னைக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியின்கீழ் ரூ.561.29 கோடியும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு பார்வையிட்ட அன்றே விரைவாகச் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் மத்திய அரசு நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கியுள்ளது. மக்கள் துயரங்களை உடனடியாகக் களைய வேண்டும் என்பதில் மத்திய அரசு காட்டும் அவசரத்தையும், அக்கறையையும் உணர்ந்து தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும்" என்று அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்