ராமநாதபுரம்
பாம்பனில் மிதவை கப்பல் தூக்குப்பாலத்தை கடந்தது
|பாம்பனில் மிதவை கப்பல் தூக்குப்பாலத்தை கடந்தது
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக மும்பையில் இருந்து சென்னை செல்லும் இழுவை கப்பல் ஒன்று மிதவைக் கப்பலை இழுத்தபடி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாம்பன் தென் கடல் பகுதிக்கு வந்து துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பாம்பன் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த சூறாவளி காற்று வீசியதுடன், கடல் சீற்றம் அடைந்து காணப்பட்டு வந்ததால் இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல பாதுகாப்பு கருதி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பாம்பன் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீசி வந்த பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது. 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவை கப்பலானது மிதவை கப்பலை இழுத்தபடி தென்கடல் பகுதியில் இருந்து வடக்கு கடல் பகுதியை நோக்கி கடந்து சென்னை எண்ணூர் நோக்கி சென்றது. அப்போது ஏராளமான மீன்பிடி விசைப் படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. மிதவைக் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் தூக்குப் பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.