< Back
மாநில செய்திகள்
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது
மாநில செய்திகள்

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது

தினத்தந்தி
|
31 May 2022 6:33 AM IST

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது.

கன்னியாகுமரி,

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

மீன்பிடி தடைக்காலம் குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி ஏற்கனவே கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி அமலில் உள்ளது. மேற்கு கடற்கரையான குளச்சல், முட்டம் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்குகிறது. விசைப்படகுகள் கரை திரும்பின இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் குமரி மேற்கு மாவட்ட கடற்கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளன.

குளச்சல் துறைமுகத்திற்கு பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன. அவை அனைத்தும் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விசைப்படகுகளும் இன்று மாலைக்குள் கரைக்கு வந்துவிடும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது, பெயிண்ட் அடிப்பது, பேட்டரி மற்றும் ஒயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் செய்திகள்