கடலூர்
அலைகளோடு துள்ளிக் குதித்து கரைக்கு வந்த மீன்கள்
|கடலூர் ராசாபேட்டையில் அலைகளோடு துள்ளிக் குதித்து கரைக்கு வந்த மீன்களை கிராம மக்கள், போட்டிப்போட்டு பிடித்துச் சென்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் ராசாபேட்டை கடலில் வழக்கம்போல் நேற்று காலையில் அலைகள் கரையை வந்து மோதின. அப்போது அலைகளோடு மத்தி மீன்கள் துள்ளிக் குதித்து கரைக்கு வந்தன. இதனை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள், அலைகளோடு துள்ளிக் குதித்து வந்த மீன்களை போட்டிப்போட்டு பிடித்து சாக்குப்பைகளில் சேகரித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மீன்கள் கரைக்கு வரவில்லை. மீன்கள் துள்ளிக் குதிப்பதை பலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகிறது.
அபூர்வ நிகழ்வு
இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் அலைகளோடு மீன்கள் கரைக்கு வந்தன. ஆனால் அப்போது குறைந்த அளவு மீன்கள் வந்தது.
தற்போது அதிக அளவில் மீன்கள் வந்துள்ளன. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். பொதுவாக கடல் அலைகளின் உயரம் குறையும் போது, இதுபோன்று மீன்கள் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளது என்றார்.
காரணம் என்ன?
மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலின் அடிப்பகுதியில் உள்ள கடல் பாசிகள் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மேல்பகுதிக்கு வரும். அப்போது கடல் நீர் கலங்களாக இருக்கும். அந்த சமயத்தில் கடல் பாசிகளை தேடிவரும் மீன்கள் வழிதவறி கரைக்கு வர வாய்ப்பு உள்ளது. பின்னர் தட்பவெப்ப நிலை சரியானதும் மீன்கள் கரைக்கு வருவது நின்றுவிடும். இதுபோன்ற நிகழ்வு வழக்கமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அரபிக் கடல் பகுதியில் நடைபெறும். ஆனால் தற்போது மிகவும் அரிதாக கடலூரில் உள்ள வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்றார்.