< Back
மாநில செய்திகள்
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர்
மாநில செய்திகள்

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர்

தினத்தந்தி
|
27 Aug 2022 11:03 AM IST

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து மருத்துவ ஊர்தி சேவைகளை முதல் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

உலகின் இரண்டாவது பழமையான மருத்துவமனையாக திகழக்கூடிய எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 204 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

அதாவது 1887 ஆம் ஆண்டு தனித்தனி கட்டிடங்களாக ஐரோப்பிய மற்றும் இந்திய கட்டிடக்கலை மாதிரிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு உட்பட அனைத்து வகையான சிகிச்சைகளும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

கண் நோய்களுக்கு உயர்தர சிகிச்சை மையமாக செயல்படக்கூடிய இந்த மருத்துவமனையில் தினசரி 800 வெளி நோயாளிகளும், 250க்கும்மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சராசரியாக தினந்தோறும் 40 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாகவும். 200வது ஆண்டை கொண்டாடும் விதமாகவும் மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் புதிதாக மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கட்டிடத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்துவைத்தார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 63.60 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

குறிப்பாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, திருவள்ளூர் கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு நல மருத்துவமனை, தாம்பரம் அரசு தாலுகா மருத்துவமனை, திருவள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலயத்தில் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட 65.45 கோடி மதிப்புள்ள பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

தமிழகத்தில் 26 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வாங்கப்பட்ட மின்கல ஊர்திகளையும் கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு முறையின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், மருந்தாளுநர்கள், மின்பணியாளர்கள் மற்றும் கருணை அடிப்படையிலான வேலை உள்ளிட்ட மொத்தம் 237 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல் அமைச்சர் வழங்கினார்.

மொத்தமாக இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 195 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ சேவைகள் தமிழக முதல் அமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மருத்துவமனை இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்