< Back
மாநில செய்திகள்
இளம்பெண்ணுடன் சினிமாவுக்கு சென்ற வாலிபரை தாக்கிய முதல் காதலன்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

இளம்பெண்ணுடன் சினிமாவுக்கு சென்ற வாலிபரை தாக்கிய முதல் காதலன்

தினத்தந்தி
|
3 Oct 2023 2:15 AM IST

கோவையில் இளம்பெண்ணுடன் சினிமாவுக்கு சென்ற வாலிபரை தாக்கிய முதல் காதலன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


காதல்....!


இந்த வார்த்தை புனிதமானது. இதுதான் வாழ்க்கையை இறுதிவரை அரவணைத்து செல்கிறது. ஆனால் இதற்கு என்று ஒருகாலக்கெடு உள்ளது.


ஆனால் அந்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே, உருவத்தின் பார்வையிலும், பருவத்தின் தேவையிலும்... பலர் அதில் விழுந்து விடுகின்றனர்.


இதனால் முழுமை பெற்ற காதல் எல்லாம்....முதுமை வரை கூட வரும்...என்பது பொய்யாகி விடுகிறது.


உடல் இன்பம் வற்றியபிறகும்...உயிர் இன்பம் காண்பதே உண்மை காதல்..மற்றெல்லாம் உணர்ச்சி காதல் என்றும் கூறுவது உண்டு.


அந்தவகையில் இந்த இளம் காதலர்களும் இமைகளுக்குள் மலர்ந்து...இதயத்துக்குள் நுழைந்து காதலித்தனர். டீன் ஏஜ் வயதுக்குள் பூத்திருந்த அவர்கள், ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாளுமே காதலர் தினக்கொண்டாட்டத்தில் கைகோர்த்திருந்தனர். ஆனால்...ஆசையாய் பழகிய காதலனின் நடவடிக்கை...அன்பாய் பழயிய காதலிக்கு பிடிக்க வில்லையாம்... இதனால் காதலனை சந்திப்பதை தவிர்த்தாள் அவள்.


என்னாச்சு...? என்னவளுக்கு... என்கிற ஏக்கம் அவனுக்கு. இதற்கு பின் என்ன ஆகவேண்டும் என்கிற கோபம் அவளுக்கு. இதனால் இணை பிரியாமல் இருந்தவர்கள்... இடைவெளியாகி விட்டனர்.


கோவையை சேர்ந்த அந்த காதலன் பெயர் பாசில் (22). இவரால் அந்த காதலையும், காதலியையும் மறக்க முடியவில்லை. ஆனால்....காதலித்த இளம் பெண் பாசிலை முகம் கொடுத்து பேச மறுத்து விட்டாள். இதுதான் இந்த இனிக்கும் இளமை காதல் படத்தின் முற்பகுதி. இனி இடைவேளைக்கு பிறகு பின்பகுதியை பார்க்காலம்... அந்த இளம் பெண், நடவடிக்கை பிடிக்காமல் கழுவிய பாசில் என்கிற காதலனை விட்டு, மனதுக்கு பிடித்த மற்றொரு 21 வயது காதலனை மனதார காதலிக்க தொடங்கி விட்டார்.


இதனால் நேற்றைய காதலை கனவில் வந்ததாக நினைத்து...இன்றைய காதலையே அந்த இளம் பெண் நாளைய நம்பிக்கையாக்கி கொண்டு, அந்த 21 வயது காதலனுடன் நடைபோட தொடங்கினாள்.


இது வரை கதாநாயகனாக இருந்த....பாசில் இதனை அறிந்து, வில்லனாக மாறி விட்டார்.


இது தொடர்பாக பாசிலுக்கும், அந்த 21 வயது வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் பாசில், அந்த இளம்பெண் தனது காதலி என்றும், நீ காதலிக்க கூடாது என்றும் வாலிபரை மிரட்டி வந்துள்ளார்.


சம்பவத்தன்று அந்த வாலிபர் தனது, இளம் பெண்ணான அந்த காதலியை சரவணம்பட்டியில் உள்ள ஒரு மாலுக்கு சினிமா பார்க்க அழைத்து சென்றுள்ளார்.


இதையறிந்த பாசில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்த வாலிபரை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.


கூடவே இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை, பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றால் சரமாரியாக அடித்து, தாக்கி உள்ளனர். பின்னர் அவரை அந்த இளம்பெண்ணுடன் பழகக்கூடாது என மிரட்டி விட்டு அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.


இதில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.


இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் பாசில் மற்றும் அவரது நண்பர்கள் சக்திவேல் (23), நிதீஷ் (22), ஜோதி (24) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுதான் காதல் என்று கேள்விப்பட்டு இருப்போம்...ஆனால் இப்படியும் காதல்....அதனால் மோதல் என்று நிஜமாக சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்