சென்னை
ஹஜ் புனித பயணம் முடிந்துn 150 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது
|ஹஜ் புனித பயணம் முடிந்து 150 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது. விமான நிலையத்தில் அவர்களை சால்வை அணித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
ஹஜ் புனித பயணம்
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனித பயணம் ஆகும். துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள். கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் புனித பயணம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து செல்ல முடியாததால் கொச்சியில் இருந்து சென்றனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு புனித ஹஜ் பயணத்துக்காக முதல் ஹஜ் விமானம் கடந்த மாதம் 7-ந் தேதி சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா ஜித்தா நகருக்கு 128 பெண்கள் உள்பட 254 பேருடன் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 3954 பேர், புதுச்சேரியை சேர்ந்த 58 பேர், அந்தமான்-நிக்கோபர் தீவை சேர்ந்த 149 பேர் என மொத்தம் 4161 பேர் 19 விமானங்களில் புனித பயணம் சென்றனர்.
சென்னை திரும்பினர்
இந்தநிலையில் புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு முதல் விமானம் 150 பேருடன் நேற்று சென்னை திரும்பி வந்தது. ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பி உள்ளனர். ஹஜ் பயணம் சென்று வந்தவர்களை முதல்-அமைச்சர் சார்பில் வரவேற்றோம்.
ஜெருசலேம் புனித யாத்திரை
ஜெருசலேம் புனித யாத்திரை திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சரியான தகவல்களை கூறவேண்டும். கொரோனா காலத்துக்கு பின்னர் தற்போது ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களைவிட கூடுதலானோர் பயணிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜெருசலேம் செல்வோருக்கு மானியமாக ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளார். ஹஜ் பயணத்துக்கு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள முதல் முறை பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் பிரித்து வழங்கப்படும். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட சட்ட வல்லுனர்களின் குழு அறிவுரைப்படி செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.