< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
மாநில செய்திகள்

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தினத்தந்தி
|
5 Jan 2023 12:13 AM IST

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

சென்னை,

இந்த மாதம் 1-ந் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

அந்த வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

இறுதிப்பட்டியல் தயாரிப்பு

அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியீடு

இந்த இறுதிப்பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார். அதன் பின்னர் இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்டங்களில் கலெக்டர்களும் வாக்காளர் இறுதிப்பட்டியலை இன்று வெளியிடுவார்கள்.

மேலும் செய்திகள்