திருவள்ளூர்
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
|திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 161 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிலுவைத் தொகை வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அடையாளமாக 11 முன்னோடி விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகை ரூ.70 லட்சத்து 75 ஆயிரத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 31-12-2021 முதல் 2-1-2022 வரை பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த 3,023.37 எக்டேர் அளவிலான நெல், நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் ரூ.4 கோடியே 3 லட்சம் தொகை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகுதியுள்ள 4,592 விவசாயின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிவியாபாரிகள் தலையீடு செய்வதை மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் தெரிவிக்க ஏதுவாக உதவி மையம் எண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முனைவர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன் திரளான விவசாயிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.