கரூர்
கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு
|கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மேகதாது அணை
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மதிக்காத கர்நாடக அரசை நடுவர் மன்றம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு ஆணை பெற வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் உடனடியாக தேசியமயமாக்கப்பட வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை உடனடியாக கிடைப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மழைக்காலங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை சேமித்து வைப்பதற்கு அதிகளவில் தடுப்பணை மற்றும் கதவணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் உடனடியாக இணைப்பதற்கு மத்திய அரசு ஆய்வு செய்து நிதி உதவி வழங்கிட வேண்டும்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மேகதாது அணைக்கட்டு பிரச்சினை சம்பந்தமாக அனைத்து விவசாய சங்கத்தையும் உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாயனூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று காலை மாயனூர் ரெயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட அனுமதி இல்லை எனக்கூறி விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும், கரும்பினை கையில் ஏந்தியும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.