கள்ளக்குறிச்சி
விவசாயியை காரில் கடத்தி சென்று கொடூர தாக்குதல்
|திருநாவலூர் அருகே விவசாயியை காரில் கடத்தி சென்று கொடூரமாக தாக்கி நடுரோட்டில் வி்ட்டுச்சென்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). விவசாயியான இவரது மகனுக்கும், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (56) என்பவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது. தற்போது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் ராமசாமி இருந்தார். அப்போது அங்கு சென்ற முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களான விக்னேஷ் (25), ஆனந்தபாபு (30) உள்ளிட்ட சிலர் ஒன்று சேர்ந்து ராமசாமியை காரில் கடத்தி சென்று பயங்கரமாக தாக்கியதோடு, அவரை மிரட்டி 50 பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை
அதன் பிறகு அவரை நடுரோட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றதாக தெரிகிறது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் முருகன், விக்னேஷ், ஆனந்தபாபு, சுதாகர் உள்பட 5 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.