கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 10 நாட்கள் போராடிய விவசாயி - கலெக்டர் அதிரடி உத்தரவு
|திருப்பூரில் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பூர்,
மங்கலம், திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், விவசாயி. இவர் கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 30-ந்தேதி முதல் வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஆய்வு செய்தனர். பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் விவசாயி விஜயகுமாரிடம், கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.
ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விவசாயி விஜயகுமார், கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த விவசாயியிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோடங்கிபாளையம் பகுதியில் விதிகளை மீறிய கல்குவாரி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த விவசாயி விஜயகுமார் தனது போராட்டத்தை கைவிட்டார்.