< Back
மாநில செய்திகள்
குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Sept 2022 4:17 PM IST

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்குப் பணிக்குச் சென்ற திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்த அன்புத்தம்பி முத்துக்குமார் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தம்பி முத்துக்குமாரின் மரணத்தால் பேரிழப்பைச் சந்தித்து, தவித்து நிற்கும் அவரது பெற்றோருக்கும், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துப் பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பெரும் தொகை கொடுத்து இடைத்தரகர் மூலமாக, குவைத் நாட்டிற்கு கடந்த 3 ஆம் தேதி தூய்மை பணி வேலைக்குச் சென்ற தம்பி முத்துக்குமார், அங்கு ஏமாற்றப்பட்டு ஒட்டகம் மேய்க்கும் பணி அளிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடினமான பணி குறித்து வேதனையோடு தமது குடும்பத்தினரிடம் தெரிவித்ததோடு, தரகரிடமும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தம்பி முத்துக்குமார் முறையிட்டுள்ளார். மேலும், இந்தியத் தூதரகம் மூலம் தாயகம் திரும்பிட முத்துக்குமார் முயற்சித்து வந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி முத்துக்குமார் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்சசியிலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது

முழுமையான உடல் நலத்துடன் வேலைக்குச் சென்ற, தம்பி முத்துக்குமார் ஒரு வாரத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது, அவர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை அவரது குடும்பத்தினரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முத்துக்குமாரின் பெற்றோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

மோடி அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தூதரகம் போலவே, தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகமும் செயலற்றத் துறையாகவே உள்ளது. தம்பி முத்துக்குமாரின் மரணத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மேல் நடவடிக்கைகள் குறித்து இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும். வெளிநாடுகளில் தமிழர்கள் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் இந்திய தூதரகத்தின் தொடர் அலட்சியப்போக்கு, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் இந்திய ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மானப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடேயாகும்.

ஆகவே, இனியாவது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குவைத் அரசிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு, தம்பி முத்துக்குமாரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு, சட்டப்படி கடும் தண்டனை தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு அதிகபட்ச துயர்துடைப்பு நிதியைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதரகத்தின் மூலமாக, விரைந்து தம்பி முத்துக்குமாரின் உடலைத் தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்