திருச்சி
மண்எண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த குடும்பத்தால் பரபரப்பு
|மண்எண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் கேன்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். இதில் திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்த துரைராஜ், தனது குடும்பத்துடன் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர்.
அப்போது துரைராஜ் கொண்டு வந்த ஒரு பையில் மண்எண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. அந்த கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் துரைராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நாங்கள் வசிக்கும் வீட்டை, எனது சித்தப்பா எங்களுக்கு எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் எனது உறவினர் ஒருவர் இந்த வீட்டில் அவர்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததாக, கூறினார். இதையடுத்து அவரை மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.
மணல் திருட்டு
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் கரையில் இருந்து யாத்திரி நிவாஸ் வரை தொடர் மணல் கொள்ளை தினமும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் மனுக்கள் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மணல் திருட்டால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், என்று கூறியிருந்தனர்.
திருச்சி பழங்கனாங்குடி சவேரியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆரோக்கியமேரி கொடுத்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக என்னையும், எனது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். மேலும் நாங்கள் புனித சவேரியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என்று தடுக்கின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் மனு கொடுத்தனர்.