தஞ்சாவூர்
எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை
|எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை
சேதுபாவாசத்திரம்:
தஞ்சை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால், 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விசைப்படகுகள்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கஜா புயலுக்கு முன்பு வரை 286 விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கஜா புயல் ஏற்படுத்திய சேதம் காரணமாக தற்போது இந்த பகுதியில் 146 விசைப்படகுகளே உள்ளன.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் காரணமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேநேரத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, சேதுபாவாசத்திரம், காரங்குடா, மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் உள்ள 4,500 நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மீனவர்கள் ஏமாற்றம்
கடந்த 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து 61 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். பல நாட்களுக்கு பிறகு மின்பிடிக்க சென்றதால் அதிக மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மீன்கள் மற்றும் இறால் பிடிபடாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-
ஆர்வம் காட்டவில்லை
மீன்பிடி தடைக்காலத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து படகுகளை மராமத்து செய்தோம். அதேபோல் டீசல், தினக்கூலி, தளவாட பொருட்கள், ஐஸ் கட்டிக்கு என சராசரியாக ஒவ்வொரு மீனவரும் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்றோம்.
ஒரு படகிற்கு 200 கிலோ வரை இறால் கிடைக்கும் என எதிர்பார்த்து வலைவிரித்தோம். ஆனால் 50 முதல் 100 கிலோ வரை தான் இறால் பிடிபட்டது. எதிர்பார்த்த அளவு மீன்களும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஏற்றுமதியாளர்களும் இறாலை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கிறோம். இறால் விலை மிகவும் குறைவாக இருப்பதால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.