தேனி
தேனியில் பரபரப்பு:மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 37 கடைகள் இடித்து தரைமட்டம்:வீடுகளை அகற்ற எதிர்ப்பு; மக்கள் சாலை மறியல்
|தேனியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 37 கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரெயில்வே மேம்பாலம்
தேனியில், மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிக்காக மதுரை சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த 45 வீடுகள், 37 கடைகள் என மொத்தம் 82 கட்டிடங்களை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் வசிப்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் வீடுகளை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அறிவித்தபோது, சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்றனர். இருப்பினும் வேறு வாழ்விடம் இல்லாத ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து அதே பகுதியில் வசித்து வந்தனர். டீக்கடைகள், மளிகை கடைகள், வாகன பராமரிப்பு நிலையம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகள் போன்றவை தொடர்ந்து செயல்பட்டன.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு பகுதிக்கு வந்தனர். பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து தலைமையில், தாசில்தார் சரவணபாபு, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சீதாராமன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து மாற்றுஇடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுஇடம் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாகவும், தற்போது கடைகள் மட்டுமே இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் கடைக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடித்து தரைமட்டம்
இந்த எதிர்ப்பை மீறியும் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், கடைக்காரர்கள் தங்களின் கடைகளில் இருந்த பொருட்களை காலி செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 37 கடைகளையும் இடிக்கும் பணி நடந்தது. அவை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.