ஈரோடு
ஈரோட்டில் பரபரப்பு:மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்;
|ஈரோட்டில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆடிட்டிங் பயிற்சியாளருக்கு அடி-உதை விழுந்தது.
ஈரோடு காந்திஜி ரோடு ஜவான் பவன் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஆடிட்டர் ஒருவர் ஆடிட்டர் அலுவலகம் வைத்து, சி.எம்.ஏ. என்ற பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் ஆடிட்டர் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரிடம் இதுபற்றி கூறி உள்ளார். இதையடுத்து அந்த மாணவர் இதுகுறித்து ஆடிட்டிங் பயிற்சியாளரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆடிட்டர் அந்த மாணவரிடமும், மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவரின் மீது நேற்று முன்தினம், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆடிட்டர் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் அந்த மாணவரை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட மாணவர், பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் ஆடிட்டரின் பாலியல் சில்மிஷம் குறித்து கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை ஆடிட்டரின் அலுவலகத்துக்கு வந்து அவரை அடித்து உதைத்தனர். அங்கிருந்து தப்பித்த ஆடிட்டர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்ந்தார். ஆடிட்டர் அலுவலகம் முன்பு ஒன்றுகூடிய மாணவ-மாணவிகள் மற்றும் உறவினர்கள் அவரை கைது செய்யக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.