< Back
மாநில செய்திகள்
அலங்காநல்லூரில் பரபரப்பு: 2 குழந்தைகளுடன் விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த இளம்பெண்- பேஸ்புக் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் விபரீத முடிவு
மதுரை
மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் பரபரப்பு: 2 குழந்தைகளுடன் விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த இளம்பெண்- பேஸ்புக் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
6 Oct 2023 1:56 AM IST

2 குழந்தைகளுடன் விஷம் குடித்துவிட்டு அலங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. பேஸ்புக் காதலன் வேறு ஒரு பெண்ணை மணந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.

அலங்காநல்லூர்


விஷம் குடித்துவிட்டு வந்தனர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்த பெண் கண்மணி (வயது35). இவர் தன்னுடைய 11 வயது மகன், 9 வயது மகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில், அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீசாரிடம், ஒரு புகார் கொடுக்க வேண்டும் எனக்கூறி இருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென அந்த பெண்ணும், குழந்தைகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அந்த பெண்ணையும், குழந்தைகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பேஸ்புக் மூலம் பழக்கம்

அரைகுறை மயக்கத்தில் இருந்த அந்த பெண் போலீசாரிடம் கூறும்போது, "எனக்கும், என்னுடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் மதுரை செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும் எனக்கும் பேஸ்புக் (முகநூல்) மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 ஆண்டாக அவருடன் தொடர்பு இருந்தது. அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் அவரை நம்பினேன்.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு என்னை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை சரண்ராஜ் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்., வாழ பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுத்தேன். நான் இறந்துவிட்டால் என் குழந்தைகளுக்கு யாரும் ஆதரவாக இருக்கமாட்டார்கள். அதனால் குழந்தைகளுக்கும் விஷம் கொடுக்க நினைத்தேன். நானும், குழந்தைகளும் எலி பேஸ்ட்டை (விஷம்) சாப்பிட்ேடாம்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

தீவிர சிகிச்சை

உடனே கண்மணியும், குழந்தைகளும் அருகில் உள்ள அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

கைது

கண்மணியுடன் பழகி அவரை ஏமாற்றியதாக சரண்ராஜை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்