< Back
மாநில செய்திகள்
அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்
கரூர்
மாநில செய்திகள்

அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்

தினத்தந்தி
|
26 May 2022 12:11 AM IST

அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

கரூர்,

கரூர் மாரியம்மன் கோவில்

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத உற்சவ திருவிழா வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவில் முன்பு மூன்று கிளையுடைய வேப்பமர கம்பத்தினை நட்டு வைத்து தினமும் பக்தர்கள் பால், புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த கம்பத்தினை ஆற்றுக்கு கொண்டு போய் விடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் கரூருக்கு வருகை தருவதால் கம்பம் விடும் நாளில் கரூர் களை கட்டும்.

கம்பத்தை நட்டு வழிபாடு

அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 8-ந்தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்றைய தினம் மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து, சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் அன்று மாலை அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு வேப்பிலைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை கட்டி பூஜை செய்து, அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலில் கம்பம் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் தினமும் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனித நீர் எடுத்து வந்து குடம் குடமாக கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கடந்த 13-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் 47 பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். பின்னர் 15-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி தேரோட்டமும் நடந்தது. கடந்த 23ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை பிரார்த்தனை நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டன.

அம்மனுக்கு சிறப்பு பூஜை

அதன்படி கடந்த 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திரளான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு பால்குடம் மற்றும் புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மதியம் 1 மணி வரை பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து கோவிலை சுற்றி புனிதநீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள கம்பத்திற்கு வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஊர்வலம்

இதனைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.10 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை எடுத்து பூசாரி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேள-தாள வாத்தியங்கள் முழங்கின. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தினுள் கம்பம் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பூவினை கம்பத்தின் மீது தூவினர். பின்னர் கம்பம் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.

தேங்காய் உடைத்து வழிபாடு

அப்போது கரூர் ஜவகர்பஜார் வீதியில் வழிநெடுகிலும் பக்தர்கள் தாம்பூலக்கூடையில் வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கம்பத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி வழங்கி திருநீறு பூசினார். அம்மனின் கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பி வைக்கும் ஆனந்தத்தில் சிலர் அருள் வந்து சாமி ஆடியதையும் காண முடிந்தது.கூட்டம் கட்டுக்கடங்காமல் முண்டி அடித்து வந்ததால் போலீசார் கம்பத்தின் அருகே கயிறு மூலம் தற்காலிக தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டே வந்தனர்.

ஆற்றில் விடப்பட்டது கம்பம்

கம்பமானது இரவு 7.25 மணியளவில் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி தாயே... பராசக்தி தாயே... என கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர். இதற்கிடையே அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதையடுத்து இரவு 7.35 மணியளவில் ஆற்றில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கம்பம் விடப்பட்ட இடத்தில் பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.பின்னர் அமராவதி ஆற்றில் இரவு 7.35 மணியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் கரூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் கரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கலந்து கொண்டவர்கள்

இதில் மின்சாரம் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், அன்பரசன், ஆர்.எஸ்.ராஜா, சக்திவேல், தெற்கு மாநகர தி.மு.க. பொறுப்பாளர் சுப்பிரமணி, கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செல்வம், மத்திய மாநகர பா.ஜ.க. தலைவர் கார்த்திகேயன், தெற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் ராயனூர் ரவி, வடக்கு மாநகர பா.ஜ.க. தலைவர் வடிவேல், கரூர் வடக்கு மாநகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் பாபு, பழனிமுருகன் ஜூவல்லரி பாலமுருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.சண்முகம், சேரன் ராஜேந்திரன், பாலாஜி பேப்ரிக்ஸ் சண்முகம், ஜெயந்தி டையிங் பழனிச்சாமி, கே.சி.எஸ். சங்கர் ஆனந்த், வித்யா பிளைவுட் ஜவகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்