கரூர்
கரூரில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
|கரூரில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து ெசன்றனா்.
சோதனை
கரூரில் கடந்த 3-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அவரது பைனான்ஸ் அலுவலகம், தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் பிரகாஷ் வீடு மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அவரது பைனான்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை அன்று இரவே முடிவடைந்தது. தொடர்ந்து தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் பிரகாஷ் வீடு மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் விடிய, விடிய சோதனை நடைபெற்றது. இதில் தனலட்சுமி மார்பிள்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை காலை 8.30 மணியளவில் முடிவடைந்தது.
முக்கிய ஆவணங்கள்...
இந்நிலையில் கரூர் அண்ணாநகரில் உள்ள லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்தில் வீட்டில் மதியம் சோதனை நடைபெற்று சிறிதுநேரத்தில் முடிவடைந்தது. இதேபோல் பிரகாஷ் வீட்டில் நடைபெற்ற சோதனையும் முடிவடைந்தது.
பின்னர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள லக்கி டிரேடர்ஸ் அலுவலகத்தில் 2 கார்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.