அரியலூர்
செந்துறை அருகே மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை
|செந்துறை அருகே உள்ள அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
மணல் குவாரிகள்
தமிழகத்தில் மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக அரசு மணல் குவாரிகளிலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு சோதனை தொடங்கியது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டுள்ள அளவை பார்வையிட்டனர். இந்த தொடர் சோதனையின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்திலும் அரசு மணல் குவாரிகளில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
தொழில்நுட்ப கருவி மூலம் அளவீடு
செந்துறை அருகே உள்ள தளவாய் சிலுப்பனூர் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்காக 5 கார்களில் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை வந்தனர். பின்னர் டிரோன் மூலம் மணல் குவாரியை ஆய்வு செய்தனர். மேலும் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆற்றின் பல எல்லைகளில் டேப் வைத்தும், நவீன கருவி மூலமும் அளந்து கணக்கிட்டனர்.
இதில் அனுமதிக்கப்பட்ட 4.800 கன மீட்டரை விட அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பிட்ட ஆழத்தைவிட 10 முதல் 15 அடிவரை அதிக ஆழம் தோண்டி மணல் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது. சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.