< Back
மாநில செய்திகள்
மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
மாநில செய்திகள்

மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

தினத்தந்தி
|
13 Sep 2023 12:26 AM GMT

கனிம வளத்துறை முறைகேடு வழக்கில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்திலும் விசாரணை நடைபெற்றது.

சென்னை,

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிய முக்கிய புள்ளிகள் பட்டியலை வருமான வரித்துறை சேகரித்தது. இதில் சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சிக்கினார். அவருடைய தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைகோர்த்து சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அந்த தொழில் அதிபரின் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்த மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.149 கோடி பணம், 178 கிலோ தங்கம் ஆகியவை சிக்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு அடங்கி போனது.

அதிரடி சோதனை வேட்டை

இந்த நிலையில் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் ரத்தினமும் மணல் குவாரி விவகாரத்தில் சட்டவிரோத செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தனர். மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் புகாரும் தொடர்ந்து எழுந்தது.

இதைத்தொடர்ந்து இவர்கள் தொடர்புடைய இடங்களுக்கு அதிரடி சோதனை வேட்டைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வியூகம் அமைத்தனர். அதன்படி, புதுக்கோட்டையில் உள்ள ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினத்தின் வீடு, அலுவலகம், குவாரிகள் உள்பட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கனிம வளத்துறை அலுவலகம்

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் வீடும், முகப்பேரில் உள்ள பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஒருவரது வீடும் இந்த சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகி வீட்டிலும் சோதனை நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனை முடிவில் 'ஆன்லைன்' மணல் விற்பனை தொடர்பான கணினி பதிவு விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

பள்ளிப்பட்டு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பெருமாநெல்லூர் ஊராட்சியில் உள்ள மணல் குவாரியிலும் நேற்று 7 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களும், லஞ்ச பணம் சென்ற அதிகாரிகளின் பட்டியலும் சிக்கியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி பாதுகாப்பு

புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் 7 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு கிராவல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். திண்டுக்கல் ரத்தினம் வருவாய்த்துறையில் உதவி சர்வேயராக பணியாற்றியவர். மணல் விற்பனை வியாபாரத்துக்கு பின்னர், அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தற்போது 2 பேரும் அரசியல் செல்வாக்குடன் உள்ளனர்.

சமீபத்தில் போக்குவரத்து வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்போது அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சோதனையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் நடைபெற்றது. தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை எத்தனை இடங்களில் நடைபெற்றது, இந்த சோதனையில் எவ்வளவு கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த சோதனை முடிவடைந்த பின்னர், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்