< Back
மாநில செய்திகள்
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை

தினத்தந்தி
|
13 Oct 2023 1:00 AM IST

கோவை, சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை, சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.


லாட்டரி அதிபர் மார்ட்டின்


கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்பட அவர் தொடர்பு உடைய 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.


இந்த நிலையில் லாட்டரி தொழில் கிடைத்த பணத்தை மார்ட்டின் 40 நிறுவனங்களில் முதலீடு செய்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து மார்ட்டின் தொடர்புடைய ரூ.450 கோடி அசையா சொத்துகளை முடக்கியது.


இந்த நிலையில் கடந்த மே மாதம் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன், உறவினர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.


கேரள பதிவு எண் காரில் வந்தனர்


இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் கேரள மாநில பதிவு எண் கொண்ட காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர்.

காரில் வந்த அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, ஹோமியோபதி கல்லூரி மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இதேபோல் மற்றொரு குழுவினர் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின் போது வீடு மற்றும் அலுவலகத்திற்குள் வேறு நபர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அதேபோல் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்க வில்லை.

துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாது காப்பு படையினர் வீடு மற்றும் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சென்னையில் 2 இடங்கள்


இதேபோல் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் அலுவலகம் மற்றும் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தீவிர சோதனை நடத்தினர்.

6 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அர்ஜூன் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேட்டில் மார்ட்டின் ஈடுபட்டு உள்ளார். மேலும் அவர் முறைகேடாக சம்பாதித்த ரூ.910 கோடியை 40 நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரின் ரூ.450 கோடி அசையா சொத்துகளை ஏற்கனவே முடக்கி உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கோவையில் 4 இடங்கள் சென்னையில் 2 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்