புதுக்கோட்டை
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நிறைவு
|திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நிறைவடைந்தது. முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
மாசித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 12-ந் தேதி பொங்கல் விழாவும், கடந்த 13-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. காட்டுமாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. காப்பு களைந்து, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.
ஊர்வலம்
இந்த நிலையில் விழாவையொட்டி நகரில் ஆங்காங்கே உள்ள கோவில்களில் முளைப்பாரி வைத்து பெண்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்தி வந்தனர். அந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக காட்டுமாரியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் நேற்று காலை ஊர்வலமாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் வந்து அங்கிருந்து திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் குளத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் முளைப்பாரியை மட்டும் லாரியில் எடுத்து சென்று வெள்ளாற்றில் கரைக்கப்பட்டது.
திருவிழா நிறைவையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.