சேலம்
ஓடை ஆக்கிரமிப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
|கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கொண்டலாம்பட்டி:-
கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஓடை ஆக்கிரமிப்பு
சேலம் அருகே ஜருகுமலை உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள ஓடையின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தம்மநாயக்கன்பட்டி, பனஞ்சாரி, நாழிக்கல்பட்டி, ெகாழிஞ்சிப்பட்டி வழியாக பூலாவரி பெரிய ஏரிக்கு சென்றடையும். அந்த ஏரி நிரம்பினால் உபரிநீர் திருமணிமுத்தாற்றில் கலக்கும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது.
இந்த நிலையில் ஜருகுமலையில் இருந்து தம்மநாயக்கன்பட்டிக்கு வரும் ஓடையில் சில விவசாயிகளும், வேறு சிலரும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ஜருகுமலையில் இருந்து ஓடையில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.
ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
இந்த மழைநீர் ஓடையில் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குறிப்பாக தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் பூசாரி தெருவை ஒட்டி உள்ள ஓடையில் ஆக்கிரமிப்பு காரணமாக அங்கு தண்ணீர் சீராக செல்ல முடியாததால் ஊருக்குள் மழைநீர் நேற்று முன்தினம் வெள்ளமென புகுந்தது.
இந்ததணணீர் பூசாரி தெருவுக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. குறிப்பாக இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஓடையில் இன்னும் நீர்வரத்து குறையாத நிலையில், ஊருக்குள் தண்ணீர் புகுவது நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்குள்ள விநாயகர் கோவிலையும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ஜருகுமலையில் பெய்யும் மழை அங்கிருந்து ஓடையாக பெருக்கெடுத்து வரும் போது, கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு இல்லாமல் நிலையில் தங்குதடையின்றி தம்மநாயக்கன்பட்டி வழியாக பூலாவரி ஏரிக்கு எளிதில் சென்றடைந்தது. தற்போது தம்மநாயக்கன்பட்டியில் இந்த ஓடையை விவசாயிகளும், வேறு சிலரும் ஆக்கிரமித்து உள்ளதால் சமீபத்தில் பெய்த மழையில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்து விட்டது.
இதனால் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ள நிலையில், ஓடையில் இன்னும் நீர்வரத்து நீடிப்பதால் ஊருக்குள் புகுந்த தண்ணீர் வடிய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.