'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
|கடந்த 10 நாட்களாக தேனி மாவட்ட மக்களை கதிகலங்க வைத்த 'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
தேனி,
கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை, தமிழக-கேரள எல்லையில் பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.
அந்த யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதியான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தது.
அங்கு உலா வந்த அந்த யானை கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதிக்கு சென்றது. அங்கு சிலர், அந்த யானையை தமிழக பகுதிக்கு துரத்தியதாக கூறப்படுகிறது.
கதிகலங்கிய மக்கள்
கடந்த 27-ந்தேதி அதிகாலையில் அந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. கம்பம் நகரில் உள்ள தெருக்களில் யானை கம்பீரமாக வலம் வந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அந்த யானை ஓடும்போது அந்த வழியாக சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அதிர்ச்சியில் கீழே விழுந்து காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே கம்பம் நகரில் இருந்து இடம் பெயர்ந்த அரிக்கொம்பன் யானை சுருளிப்பட்டி வழியாக மலையடிவார பகுதிக்கு சென்றது. யானையை பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அடம்பிடித்த யானை
இதேபோல் ஆனைமலை, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. யானைகளின் குணாதிசயங்களை நன்கு அறிந்த பழங்குடியினர் சிறப்பு குழுவினரும் முதுமலையில் இருந்து வந்தனர். வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்தது.
ஊருக்குள் வர விடாமல் யானையை தடுக்கவும், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவும் தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அரிக்கொம்பன் யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம் பிடித்து மலையடிவார பகுதி வழியாக உலா வந்தது.
சுருளிப்பட்டி பகுதியில் இருந்து நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி வழியாக சண்முகாநதி அணை பகுதிக்கு வந்தது.
மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
கடந்த சில நாட்களாக சண்முகாநதி அணை பகுதியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை, நேற்று முன்தினம் நள்ளிரவில் சின்னஓவுலாபுரம் பகுதிக்கு வந்தது. அங்கு சமதளமான பகுதி என்பதால், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி சின்னஓவுலாபுரம் பெருமாள்மலை கோவில் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிதுநேரத்தில் அந்த யானை அருகே இருந்த தனியார் தோட்டத்துக்குள் புகுந்தது.
இதைத்தொடர்ந்து கம்பத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கும்கி யானைகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. அரை மயக்கத்தில் இருந்த அரிக்கொம்பன் யானையை, நேற்று அதிகாலையில் 3 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு...
இதைத்தொடர்ந்து அந்த யானை, 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அரிக்கொம்பன் யானையுடன் லாரி புறப்பட்டது. லாரியின் முன்பும், பின்னாலும் கார், ஜீப்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் அணிவகுத்து சென்றனர்.
மேலும் பலர் தங்களது செல்போனில் ஆர்வத்துடன் புகைப்படமும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த யானை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடப்பட்டது.
144 தடை நீக்கம்
10 நாட்களாக மக்களை பீதி அடைய செய்த அரிக்கொம்பன் காட்டுயானை நேற்று தேனி மாவட்டத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பீதியில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
யானையை பிடிக்கும் பணி காரணமாக கம்பம், கூடலூர் நகராட்சிகள், கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
யானை பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்று காலையில் இருந்து 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.
உடலில் காயம்
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையின் தும்பிக்கையில் பெரிய அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த காயம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.
ஜூன் 5-ந்தேதியான நேற்று, உலக சுற்றுச்சூழல் தினம் ஆகும். சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த யானை, சுற்றுச்சூழல் தினத்தில் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யானையை கட்டிய கயிறு அறுந்ததால் பரபரப்பு
அரிக்கொம்பன் யானை ஏற்றப்பட்ட லாரியில் யானை நகராமல் இருக்க குறுக்கே கம்புகள் வைத்ததோடு, கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன. தேனியை கடந்து மதுரை சாலையில் குன்னூர் சுங்கச்சாவடி அருகில் சென்றபோது யானையை கட்டி இருந்த கயிறு அறுந்தது. லாரியில் இருந்த பணியாளர்கள் அதை உடனடியாக கவனித்தனர்.
இதையடுத்து லாரி நிறுத்தப்பட்டது. லாரியுடன் கார்களில் சென்ற வனத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அறுந்த கயிறு மீண்டும் சீராக கட்டப்பட்டது. அதன்பிறகு லாரி அங்கிருந்து யானையுடன் புறப்பட்டுச் சென்றது. அந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மக்கள் எதிர்ப்பு
இதற்கிடையே அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென்று சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் பல உயிர்களை பலி வாங்கிய அரிக்கொம்பன் யானையை விட்டால் உயிர் சேதம் ஏற்படும். எனவே, வனத்துறையினர் வேறு ஏதேனும் முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.
முத்துக்குழியில் விடப்பட்டது
இதையடுத்து மணிமுத்தாறு வன சோதனை சாவடியை கடந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல்கோதையாறு அணை அடர்ந்த வனப்பகுதியான களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழியில் யானை விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.