புதுக்கோட்டை
பாடம் நடத்திய 2-ம் வகுப்பு மாணவிக்கு கல்வி அலுவலர் பாராட்டு
|திருமயம் அருகே பாடம் நடத்திய 2-ம் வகுப்பு மாணவிக்கு கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
திருமயம் ஒன்றியம், அரசம்பட்டியில் அவ்வையார் ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு மொத்தம் 72 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமையாசிரியராக சுமதி பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் (தொடக்கநிலை) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியை சுதா 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களிடம் தாங்கள் படித்து என்னவாக போகிறீர்கள்? என்ற விருப்பத்தை கரும்பலகையில் எழுதிக்காட்டுங்கள் என கூறினார். மாணவர்களும் தங்களது விருப்பத்தை கரும்பலகையில் எழுதினார்கள். இதில் மாணவி கனிஷ்கா தான் நன்றாக படித்து ஆசிரியையாக வேண்டும். மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று கூறினார். உடனே மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாணவி கனிஷ்காவை பாடம் நடத்த அனுமதித்தார். மாணவி கனிஷ்காவும் தன்னுடைய பாடப்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாணவர்களும் கனிஷ்கா கூறுவதை கேட்டு சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர். உடனே மாவட்டக்கல்வி அலுவலர் கனிஷ்காவை வகுப்பாசிரியர் அமரும் நாற்காலியில் அமர வைத்து 2-ம் வகுப்புக்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்துள்ளார் என கூறி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.