"துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது.. உலக நாடுகள் ஓடி வரட்டும்" - கவிஞர் வைரமுத்து டுவீட்
|துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
சென்னை,
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.
நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 3,419 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கியின் கீழே
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj