குடிபோதையில் தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன்... குழவிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி
|மணப்பாறை அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி (வயது 30). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், அற்புதமேரி(27) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிபோதையில் வில்லியம் வேளாங்கண்ணி தனது மனைவியுடன் தொடர்ந்து பிரச்சினை செய்ததாகவும், இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் நேற்று காலை அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அற்புதமேரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் மாலையில் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் வில்லியம் வேளாங்கண்ணி வீட்டில் படுத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அற்புதமேரி அங்கிருந்த குழவிக்கல்லை எடுத்து, வில்லியம் வேளாங்கண்ணியின் தலையில் போட்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் வில்லியம் வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து வில்லியம் வேளாங்கண்ணியின் உடலை வையம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அற்புதமேரியை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததும், குடிபோதையில் தன்னை துன்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்த அற்புதமேரி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.