தேனி
5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த டிரைவர் கைது
|போடி அருகே மனைவி, மாமியாரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மனைவி, மாமனார் கொலை
தேனி மாவட்டம் போடி அருகே சுந்தரராஜபுரம் ஒண்டிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுருளிராஜ் (வயது 49). கார் டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் தனது தந்தை கனகராஜ் வீட்டில் ஜெயந்தி இருந்தார்.
அப்போது அங்கு வந்த சுருளிராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தனது மனைவியை குத்தினார். அதை தடுக்க வந்த மாமனார் கனகராஜையும் கத்தியால் குத்தினார். இதில் மனைவி, மாமனார் இருவரும் உயிரிழந்தனர்.
தலைமறைவு
இந்த இரட்டை கொலை தொடர்பாக போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளிராஜை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் 3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சுருளிராஜ் தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீசார் பல வழிகளில் முயற்சி செய்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், சுருளிராஜை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.
தனிப்படை
இதையடுத்து சுருளிராஜ் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில், ஏட்டுகள் வேல்முருகன், அருண், ராம்குமார் சேதுபதி ஆகிய 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பல்வேறு வழிகளில் துப்புத் துலங்கியும் சுருளிராஜை கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அவருடைய செல்போன், ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், ஓட்டுனர் உரிமம் போன்ற எதை வைத்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர், கார் டிரைவர் என்பதால் சில வாடகை கார் சேவை இணையதளங்களில் தனிப்படையினர் தேடினர்.
கோவையில் சிக்கினார்
சுருளி என்ற பெயரில் இருக்கும் நபர்களின் விவரங்களை சேகரித்து ஒவ்வொரு நபரையும் மறைமுகமாக போலீசார் கண்காணித்தனர். அப்போது, கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சில டிரைவர்கள் தங்கி இருந்து வேலைபார்ப்பதாகவும், அதில் ஒருவர் பெயர் சுருளி என்றும் தெரியவந்தது.
அங்கு சாதாரண உடையில் போலீசார் சென்று பார்த்தபோது, சுருளிராஜ் அங்கு இருப்பது தெரியவந்தது. வந்திருப்பது போலீசார் என்று தெரிந்தவுடன் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தனிப்படையினர் நேற்று அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது அடையாள ஆவணங்கள் அனைத்தையும் தீ வைத்து எரித்து அழித்துவிட்டு, கோவை, திருப்பூர், சேலம் போன்ற பகுதிகளில் அகதிபோல் சுற்றித் திரிந்ததாகவும், ஆங்காங்கே கிடைத்த வேலைகளை பார்த்து வந்ததாகவும் தெரியவந்தது. அவரை தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.